இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்தவேளை அதில் பங்காளியானவர்கள் இன்று மனித உரிமை மீறல்களையும், மனிதகுல விரோத செயற்பாடுகளையும் விசாரிக்க முன்னிற்கின்றனர். இத்தகைய நாடுகள் பற்றி அமெரிக்க வெளியுறவு முன்னாள் செயலாளர் தெரிவித்த கருத்து, ‘நாடுகள் நல்லுறவை நாடுபவை அன்று, அவை தம்நலன் மட்டுமே நாடுபவை” என்பது. முக்காலமும் பொருந்தும் இவ்வாசகம் தமிழர் மனதில் எக்காலமும் கல்வெட்டாக இருக்க வேண்டியது.
தமிழர் தேசத்தையும் தமிழ்த் தேசியத்தையும் முன்னிறுத்தி இடம்பெறும் பல செயற்பாடுகள் இக்காலத்தில் ஒப்பேற்றப்பட்டு வருகின்றன. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களே சில விடயங்களில் முக்கிய வகிபாகத்தை மேற்கொள்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச, புலம்பெயர் தமிழர்களுடனும் அவர்களின் அமைப்புகளுடனும் தாம் பேச விரும்புவதாக பகிரங்க அழைப்பை விடுத்து நம்பிக்கைதராத அதிர்வை ஏற்படுத்தினார்.
புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளை பெயர் குறிப்பிட்டு தடை செய்தவர், எவ்வாறு அவர்களை பேச்சுக்கு அழைக்க முடியுமென எழுந்த சந்தேகத்தை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெளிவுபடுத்தினார். தடைசெய்யப்பட்ட தமிழர் அமைப்புகளுடன் ஜனாதிபதி பேசமாட்டாரென்றும், அதற்கும் அப்பாலுள்ளவர்களுடனேயே அவர் பேசுவார் என்றும் தெரிவித்ததோடு அந்த விவகாரம் முற்றுப்பெறவில்லை.
இங்கிலாந்திலுள்ள குளோபல் தமிழ் ஃபோரம் என்னும் உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் இது தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில், சில விடயங்கள் பொதுவெளிக்கு வந்துள்ளது. முதலில் கோதபாயவும் பீரிசும் தங்களுக்குள் கலந்துரையாடி இவ்விடயத்தில் தெளிவுபெற வேண்டுமெனக் கூறியுள்ளதோடு, இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் அவர்கள் முதலில் பேச வேண்டுமென நல்ல ஆலோசனையை வழங்கியுள்ளார்.
தமிழர் பிரச்சனைத் தீர்வு விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பு இன்னும் அதிகமாக வேண்டுமென்ற கருத்தோடு, தமிழருக்கு உதவவும் உரையாடவும் சீனா ஆர்வமாக இருந்தால் அது மகிழ்ச்சியளிப்பதாக இருப்பதாகவும் தமது கருத்தை இப்பேச்சாளர் முன்வைத்துள்ளார்.
இலங்கை அரசு சீனாவை கட்டிலில் அணைத்;தவாறு, இந்தியாவின் தோளில் கைபோட்டு கூடிவாழ முனைவதற்கு ஒப்பானதாக, உலகத்தமிழர் பேரவை கனவு காண்பதை இக்கூற்றினூடாக அவதானிக்க முடிகிறது. கடந்த காலங்களில் இவ்வாறாக இரட்டை நிலைப்பாட்டை உலகத்தமிழர் பேரவை எடுத்ததால் அது பல சங்கடங்களை எதிர்கொள்ள நேர்ந்தது நினைவிருக்கலாம்.
இங்கிலாந்தை மையப்படுத்தி வெளிவந்துள்ள முக்கியமான ஒரு தகவல் – அங்குள்ள 200 தமிழர்களின் முன்னெடுப்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கலாகியுள்ள மனு.
கோதபாய ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கமால் குணரட்ன, ராணுவத் தளபதியாகவிருந்த ஜகத் ஜெயசூரிய உட்பட பல படைத்துறை அதிகாரிகளின் மனிதகுல விரோதச் செயல்களுக்காக அவர்களை உரிய நேரத்தில் கைது செய்ய வேண்டுமென இந்த மனு கோருகின்றது.
நேரடியாக சாட்சியம் வழங்கத் தயாராகவுள்ள 200 இங்கிலாந்துவாழ் தமிழர் சார்பில் குளோபல் றைற்ஸ் கொம்ப்ளையன்ஸ் (அனைத்துலக உரிமைகள் விதிமுறை) என்னும் சட்டவாளர் அமைப்பு இந்த மனுவை சமர்ப்பித்துள்ளது. மியன்மார் (பர்மா) றொகின்ங்யா முஸ்லிம்கள் விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது இதே சட்டவாளர்; அமைப்பு.
இலங்கை அரசின்மீது சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு மீதான குற்றப்பத்திரிகை இனிமேல் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர், இதன் மீதான விசாரணையை நடத்த குற்றவியல் நீதிமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும். இவற்றுக்கு ஏறத்தாழ இரண்டு வருடங்கள் வரை செல்லலாம்.
அடுத்த வாரத்தில் இங்கிலாந்தில் நடைபெறும் காலநிலை மாற்ற மாநாட்டுக்குச் செல்லவுள்ள கோதபாயவை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. எந்தச் சட்டத்திலும் அதற்கான நியாயாதிக்கம் இல்லையென்றே கூறப்படுகிறது. எனினும் அவரது விஜயத்துக்குப் பலமான எதிர்ப்பைக் காட்ட தமிழர் சமூகம் முனைப்புடன் செயற்படுகிறது.
இங்கிலாந்துப் பத்திரிகைகளில் இது தொடர்பான முழுப்பக்க விளம்பரங்களும் அறிக்கைகளும் பெருமளவு செலவில் இடம்பெறுகின்றன. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தவேளை இங்கிலாந்தில் ஒரு நிகழ்வுக்குச் சென்றபோது தமிழர் சமூகத்தால் வழங்கப்பட்ட ஷமரியாதை| அவர் பெற்றுக்கொண்ட அனுபவம். இப்போது கோதபாயவுக்கு அதனிலும்கூடிய ஷமாண்புமிகு மரியாதை| வழங்கப்பட வேண்டுமென பலரும் கருதுவதற்கு, இவர் முதலாம் இலக்க கொலைகாரராக அடையாளம் காணப்பட்டுள்ளதே காரணம்.
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்;தின் போர்வையில் இடம்பெறும் கொடூரமான செயற்பாடுகள் பற்றி இந்த வாரம் அமெரிக்க பேரவையின் மனித உரிமை ஆணைக்குழு விவாதித்தது நோக்குதற்குரியது. பதினெட்டு மாதங்கள் வரை ஒருவரை காவலில் வைக்க அனுமதிக்கும் இச்சட்டத்தால் தமிழர்கள் மட்டுமன்றி அனைவரும் பாதிக்கப்படுவதையும், ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை சாதகமாக்கி முஸ்லிம்களை கைது செய்வதையும் ஆணைக்குழு கவனத்தில் எடுத்தது.
முக்கியமாக, பயங்கரவாதத்தை முறியடிப்பது என்ற போக்கில் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழர்கள் கைதாவது, ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் அமைப்புகள் விசாரணைக்குட்படுத்தப்படுவது, அச்சுறுத்தப்படுவது, தடுத்து வைப்பது என்பவற்றை இந்த அமர்வில் பங்குபற்றிய ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் விபரித்தார்.
புனர்வாழ்வு பெற்ற நாற்பது வரையான முன்னாள் போராளிகள் வடபுலத்தில் இரவோடிரவாக கைதாகி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் போதிய ஆதாரங்களுடன் அண்மையில் தமது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இச்சட்டத்தை நீக்கினால் மட்டுமே ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்ந்து வழங்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தபோது, கோதபாய தமது வழக்கமான பாணியில் இதற்கென ஒரு ஆலோசனைக் குழுவை உடனடியாக நியமித்தார். இச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு பிரித்தானியாவிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு இணைவாக மாற்றுவதற்கு ஆலோசனைக்குழு பரிந்துரைத்தது. இதன் அர்த்தம் பயங்கரவாதத் தடைச்சட்டம் சிறு திருத்தங்களுடன் தொடர்ந்து இருக்கும் – நீக்கப்படமாட்டாது என்பதே.
ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றிய 46:1 தீர்மானமும் இச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியது. கடந்த செப்டம்பர் மாத வாய்மூல அறிக்கையில் மனித உரிமைகள் ஆணையாளர் பச்சிலற் அம்மையார் இதனை அழுத்திக் கூறியிருந்தார்.
இவைகளுக்கு எதிர்மாறாக இப்போதும் பலர் கைது செய்யப்பட்டு இதே சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுகின்றனர். ஜெனிவாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்களை எதுவுமே செய்ய முடியாதென்ற இறுமாப்புடன் ராணுவ ஆட்சி தொடர்ந்து காரியங்களை மேற்கொள்கிறது.
இவ்வேளையில் திடுதிப்பென எறிகுண்டொன்றை வீசுவது போன்று ஜனாதிபதி செயலணியொன்றை கோதபாய நியமித்துள்ளார். இதற்குப் பெயர் ஷஒரே நாடு ஒரே சட்டம்| நடைமுறைக்கான செயலணி. மொத்தம் 13 உறுப்பினர்களை (இதிலும் 13 தான்) அவர் நியமித்துள்ளார். ஒன்பது பேர் சிங்களவர், நால்வர் முஸ்லிம்கள். தமிழர் தரப்பிலிருந்து எவருமில்லை. பெண்களுக்கு இடமேயில்லை. இது தற்செயலானதல்ல – திட்டமிட்ட செயற்பாடு.
இதிலுள்ள சிறப்பம்சம் இந்தச் செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் யார் என்பதே. அறவழிக்குப் புறம்பான மதவெறி கொண்ட கலகொட அத்தே ஞானசார தேரரே அவர். பல நீதிமன்ற படிகள் ஏறி தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி. இறுதியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்றவர்.
2019ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி கோதபாயவின் நிறைவேற்று அதிகாரத்தால் சிறைக்காலம் முடிவடைவதற்கு முன்னர் மன்னிப்பு வழங்கப்பட்டு தப்பி வந்த பௌத்த பிக்கு இவர். இவர் சட்டவாளர் அல்ல. சட்டத்தை தூசாக மதித்து செயற்படுபவர். பொதுபலசேன என்ற சிங்கள பௌத்த தேசிய இயக்கத்தின் செயலாளர் நாயகம். கொலைகாரர் ஆட்சியில் அனைவருக்கும் பொறுப்பான சட்ட நிர்வாக நெறிமுறையை நடைமுறைப்படுத்த, அதனை மதிக்காத ஒரு குற்றவாளியை இப்பதவிக்கு கோதபாய தெரிந்தெடுத்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் எனக்கூறப்படும் நாட்டில், ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்க முடியுமென்றால், குற்றம் சுமத்தப்படாதிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஏன் முடியாது? இதற்கு ஞானசார தேரர் சம்மதம் கொடுக்க வேண்டுமா? இதுதான், ஒரே நாடு ஒரே சட்டமா?
இதனை எழுதிக் கொண்டிருக்கும்போது கிடைத்த ஒரு தகவல், இச்செயலணிக்கு மூன்று தமிழர்கள் நியமிக்கப்படப் போவதாகக் கூறுகிறது. அரசின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தொழிலாளர் காங்கிரசின் வேண்டுகோளுக்கிணங்க ஜனாதிபதி கோதபாய இந்த முடிவுக்கு வந்துள்ளாராம். வடக்கு, கிழக்கு, மலையகம் என்றவாறு பிரதேச ரீதியாக ஒவ்வொரு தமிழர் இதில் இடம்பெறுவர் எனவும் சொல்லப்படுகிறது.
‘ஏக்கராஜ்ய’ கேட்டு வரும் தமிழர் தரப்பு ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை எதிர்க்க முடியாது. அதனாற்தான் ஞானசார தேரரை தலைவராக நியமித்ததை மட்டும் எதிர்க்கிறது. சிலவேளை தங்கள் தரப்பில் ஒருவரை செயலணியில் நியமித்தால் அதனை ஏற்றுக் கொள்ளவும் கூடும்.
கோதபாயவுக்கு முன்னராக இங்கிலாந்து சென்றுள்ள அமைச்சர் பீரிஸ் அந்நாட்டின் பொதுமக்கள் அவையின் சபாநாயகர் சேர். லின்ட்சே ஹொயில் அவர்களை சந்தித்து உரையாடியபோது இலங்கையில் மீண்டும் செனற் சபை கொண்டு வரப்போவதாக கூறியுள்ளார். 1972ம் ஆண்டில் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் கலைக்கப்பட்ட செனற் சபையை மீள நிறுவப்போவதாக கூறியிருப்பது புதிய அரசியலமைப்புடன் சம்பந்தப்பட்டது.
இங்கிலாந்தில் இருப்பது போன்ற இரு சபைகளை இலங்கையில் கொண்டுவரப்போவதாகக் கூறுவது இப்போதைக்கு இங்கிலாந்தை வளைத்துப்போட உதவலாம். ஜெனிவாவில் இங்கிலாந்து தனது கூட்டு நாடுகளுடன் இலங்கை மீது தீர்மானங்கள் நிறைவேற்றுவதை மென்மைப்படுத்தவும் உதவலாம்.
இலங்கையில் போர்க்குற்றம் நிகழ்வதற்கு காரணமாகவிருந்த நாடுகள் இப்போது இலங்கையின் மனித உரிமை மீறல்களையும் தமிழரின் அரசியல் அபிலாசைகளையும் நிறைவேற்ற வேண்டுமென குரல் கொடுக்கின்றன. இலங்கைக்கு தாராள பயணங்களை மேற்கொள்கின்றன. தமிழர் தரப்பினரைச் சந்தித்து வாக்குறுதிகளும் வழங்குகின்றன.
அமெரிக்க வெளியுறவு முன்னாள் செயலாளர் டீன் அச்சேசென் ஒரு தடவை உலக நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கை பற்றி உதிர்த்த பொருள் பொதிந்த வாசகம்; தமிழருக்குமானது. ‘நாடுகள் நல்லுறவை நாடுபவை அன்று, அவை தம்நலன் மட்டுமே நாடுபவை” (Nations do not have morals, they only have their interests).
முக்காலமும் பொருந்தும் அமெரிக்க அரசியல்வாதியின் இக்கூற்று, எக்காலமும் தமிழர் மனதில் கல்வெட்டாக இருக்க வேண்டியது.
பனங்காட்டான்